சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறது.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 126 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவையான நிலையில், 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலினை தேர்வு செய்யும் வகையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதையடுத்து, முதலமைச்சராக வரும் 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.