சென்னை : திமுக பதவி ஏற்பு விழா எளிமையாக கவர்னர் மாளிகையில் நடத்த முடிவு செய்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது திமுக கூட்டணி. திமுக தனித்தே பெரும்பான்மை பெற்றுள்ளது. இதனால் திமுக ஆட்சி அமைக்கிறது. முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார். முன்னதாக வெற்றிச்சான்றிதழுடன் மறைந்த தி.மு.க.தலைவர் கருணாநிதி, அண்ணா நினைவிடத்தில் நேற்று நள்ளிரவு மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் வழங்கி உள்ளனர். இந்த மகத்தான வெற்றிக்கு வழிவகுத்து தந்திருக்கும் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் இதயப்பூர்வமான நன்றி.
தமிழகம் ஒரு பாதாளத்திற்கு போயிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் அறிந்து அதை சரி செய்ய தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுடன் மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு வழங்கி உள்ளனர். எந்த எதிர்பார்ப்போடு எந்த நம்பிக்கையுடன் அந்த வெற்றியை தந்துள்ளனரோ அதற்கேற்ற வகையில் பொறுப்பை உணர்ந்து எங்கள் ஆட்சி அதை நிறைவேற்றி தரும்.
எங்களை எல்லாம் ஆளாக்கிய கருணாநிதி ஐந்து முறை தமிழகமுதல்வராக இருந்து தமிழக மக்களுக்கு ஆற்றிய பணிகளை உணர்ந்துஉள்ளோம். அவர் வழி நின்று ஆறாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்கக் கூடிய தி.மு.க. ஆட்சியில் அதை நிறைவேற்றுவோம்.கருணாநிதி இருந்த காலத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என எண்ணியிருந்தோம். அது நிறைவேறாமல் போய்விட்டது. அது ஒரு ஏக்கமாக இருந்தது. அந்த ஏக்கம் இன்று ஓரளவுக்கு போயிருக்கிறது.
மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பை ஏற்று எங்களுக்கு ஓட்டளித்தவர்கள் ‘இவர்களுக்கு ஓட்டளித்தது தான் நல்லதே’ என மகிழும் வகையில் ஓட்டளிக்காதவர்கள் ‘இவர்களுக்கு ஓட்டளிக்காமல் சென்று விட்டோமோ’ என நினைக்கும் வகையில் எங்கள் பணி தொடரும். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நாங்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து படிப்படியாக நிறைவேற்றும்முயற்சியில் ஈடுபடுவோம்.
ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்தல் அறிக்கை தந்துள்ளோமோ அதேபோல தொலைநோக்கு பார்வையுடன் ஏழு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். அதை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவோம். எங்கள் கடமையை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
நாளை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி முறையாக தலைவரை தேர்வு செய்வோம். அதன்பின் அதிகாரிகளுடன் கலந்து பேசி பதவியேற்பு தேதியை முடிவு செய்து அறிவிப்போம்.
கொரோனா காலத்தை மனதில் வைத்துபதவிப் பிரமாண நிகழ்ச்சியை எளிமையாக கவர்னர் மாளிகையில் நடத்த முடிவு செய்துள்ளோம். தேதியை இன்று அல்லது நாளை அறிவிப்பேன்.