நாகர்கோவில்: குமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்தின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் , என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை  தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து காலியாக இருந்த அந்த தொகுதி தமிழக சட்டமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த தொகுதியில்,  காங்கிரஸ் வேட்பாளரான விஜய் வசந்த்தும், பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. விஜய் வசந்த் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுக்கும் மேல் பெற்றுள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் 2,58,712 வாக்குகள் பெற்றுள்ளார். வெற்றி உறுதியாகி உள்ளது.

இந்த  நிலையில், விஜய் வசந்த்  தனது டிவிட்டர் பக்கத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில்,

”என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன்” என்று நன்றியுடன் கோரிக்கையும் வைத்துள்ளார்.