சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் அன்புக் கட்டளைக்கு இணங்க கழக தோழர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எ ன திமுக எம்.பி., ஆர்.எஸ். பாரதி திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறு வரும் நிலையில், திமுக பெரும்பான்மை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதால் , திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். அங்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வருகின்றனர்.,
கொரோனா பரவல் காரணமாக இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. அதுபோல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இருந்தாலும் திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு படையெடுத்து வந்துகொண்டிருக்கின்றனர். தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அனைத்து நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலை சுட்டிக்காட்டி தொண்டர்களை திருப்பி அனுப்பும் பணிகளில் அண்ணா அறிவாலய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் அன்புக் கட்டளைக்கு இணங்க கழக தோழர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், கழக தோழர்கள் கொரோனாவை மனதில் கொண்டு, எந்தவித கொண்டாட்டங்களையும் வீதியில் நடத்த வேண்டாம் என திமுக தொண்டர்களுக்கு ஆர்.எஸ். பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.