
கடந்த 2007ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, இந்திராணி-பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டியது. இதற்கு, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தி வந்த நிறுவனம், சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறி வெளிநாட்டு நிதி திரட்ட அனுமதி பெற்றதாகவும், இதில் முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும். இதற்கு பிரதிபலனாக மொரீஷியஸ் நாட்டில் இருந்து கார்த்தி சிதம்பரம் நிறுவனத் திற்கு பணம் வந்துள்ளதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில், கார்த்தி சிதம்பரத்தின் வலியுறுத்தலின்பேரில், மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் முறைகேட்டிற்கு உதவியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு சுமார் 100 நாட்கள் திகார் சிறையில்வ அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜாமினில் இருந்து வருகிறார்.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வந்தது. இடையில் கொரோனா பரவல் காரணமாக விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில், ப.சிதம்பரம் சார்பில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.