புதுடெல்லி: இந்திய மக்கள்தொகையில், குறைந்தது பாதியளவு நபர்களுக்காகவாவது கொரோனா தடுப்பூசி போட்டால்தான், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றுள்ளார் நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் ராஜிவ் குமார்.
அந்தளவிற்கு தடுப்பு மருந்தை, அடுத்த சில மாதங்களில் வழங்கிவிடும் திறன் நமக்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, “இந்தியப் பொருளாதாரம், அடுத்த சில பத்தாண்டுகளுக்கு 10% முதல் 11% வரை தொடர்ந்து வளர்ச்சியடைந்தால், அடுத்த 2050ம் ஆண்டில், நாட்டின் தனிநபர் வருமானம் $16000 அமெரிக்க டாலராக இருக்கும்.
அதேசமயம், இதற்கு 5 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இந்தியாவின் முதலீடு 30% என்பதிலிருந்து, 35%-40% வரை அதிகரிக்கப்பட வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஏற்றுமதி அளவை அதிகரிக்க வேண்டும்.
ஜிடிபி -யில், உற்பத்தியளவை அதிகரிக்க வேண்டும். வேளாண்மையை நவீனப்படுத்த வேண்டும். சுதந்திரமாக வணிகம் செய்வதற்கான தடைகளை அரசு நீக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள், சுய ஒழுங்குமுறையை கடைப்பிடித்து, ஒரு பொறுப்புள்ள பங்காளராக நடந்துகொள்ள வேண்டும்” என்று பேசியுள்ளார் அவர்.