கொரோனா கொள்ளை நோயில் மக்கள் அனைவரும் கொள்ளை போய் கொண்டிருப்பது மோடி மீது இந்திய மக்களுக்கு கோபத்தை அதிகரித்துள்ளது என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா முன்னெப்போதும் கண்டிராத ஒரு பிரதமராக விளங்கும் மோடி, மக்களிடம் தனக்குள்ள செல்வாக்கை கணக்கிடும் நேரமாக இந்த கொரோனா காலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டங்களை பயன்படுத்தி கொண்டார்.
அதற்கு உதாரணமாக, ஏப்ரல் 17 ம் தேதி மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு பிரச்சார கூட்டத்தில், இதுபோல் லட்சக்கணக்கானோர் தன் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றதை முன்னெப்போதும் பார்த்ததில்லை என்று கூறியதோடு எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருந்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று பேசினார்.
அதேவேளையில், மும்பை மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி நாளொன்றுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் அப்போது பாதிக்கப்பட்டு வந்தனர்.
படிப்படியாக இந்த எண்ணிக்கை எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து, மகாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம், டெல்லி என்று நாடுமுழுக்க மருத்துவமனைகளில் படுக்கைக்கு பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, மயானங்களில் கூட சடலங்களை எரிக்க இடமில்லாமல், சாலையோர நடைபாதை முதல் பூங்காக்கள் வரை அனைத்து இடங்களிலும் பிண குவியல்களாக மாறியதுடன், மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் என்று மட்டும் இல்லாமல், வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்து இறந்தவர்களையும் ஆங்காங்கே குண்டுக்கட்டாக கொண்டுவந்து போட்டு கேட்பாரின்றி எரியூட்டும் நிலைக்கு வந்துவிட்டது.
நாளொன்றுக்கு இரண்டு லட்சம் என்றிருந்த பாதிப்பு நேற்று ஒரே நாளில் 3,86,452 என்று உலகளவில் தினசரி பாதிப்பில் புதிய உச்சத்தை தொட்டது. மருத்துவமனைகள் படுக்கைகள் இல்லாமலும், ஆக்சிஜன் இல்லாமலும் நோயாளிகளை அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்புகின்றன.
தற்சார்பு இந்தியா என்ற தன் கனவை சீர்குலைக்கும் வகையில் சுதந்திர இந்தியா முன்னெப்போதும் கண்டிராத ஒரு சீரழிவை மோடி இப்போது சந்திக்க நேர்ந்திருக்கிறது.
இரண்டாவது அலை குறித்த எச்சரிக்கை இருந்தபோதும் அதற்கான முன்னேற்பாடுகளையும் மருத்துவ உள்கட்டமைப்பையும் ஏற்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்காமல் தேர்தல் பிரச்சாரம், கும்பமேளா கொண்டாட்டம் என்று லட்சக்கணக்கில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து கொரோனா எனும் கொள்ளை நோயில் மக்கள் அனைவரும் கொள்ளை போய்க்கொண்டிருப்பது இந்திய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் அலையை விட இரண்டாம் அலை மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் ஒப்புதல் அளித்தார் பிரதமர் மோடி.
இரண்டாவது அலையை கையாள்வதில் நிர்வாகம் சீரழிந்து விட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து பிரதமர் அலுவலகம், செய்தி ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை ஆகியவை இதுவரை எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.