டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை உக்கிரமடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் உள்பட சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்லும் நிலையில், தற்போது 2 அம்பர்களும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் வெளியேறி உள்ளார். அதுபோல, ஆஸ்திரேலியாவை சேர்ந்த நடுவர் பால் ரெய்பெஃல்லும் ஐபிஎல் 2021 தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.
இந்தியாவில் தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. இது வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும், ஐபிஎல் போட்டிகள் வணிக ரீதியாக நடத்தப்படுவதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளன.
இதற்கிடையில், தொற்றுஅதிகரிப்பு காரணமாக, பல நாடுகள் இந்தியாவுடனான விமான சேவைகளை தற்காலிகமாக முடக்கி உள்ளன. ஆஸ்திரேலியாவிற்கு இந்தியாவில் இருந்து விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு முழு லாக்டவுன் வருவதற்கு முன் திரும்பி செல்ல ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள பல வீரர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் நடுவர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற்றுள்ளனர். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், கம்மின்ஸ், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட 14 முன்னாள் & இந்நாள் வீரர்கள் விளையாடி வருகிறார்கள். இதுதவிர மேத்யூ ஹேடன், பிரட் லீ, மைக்கேல் ஸ்லாடர், லிசா ஸ்தாலேகர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களும் உள்ளனர்.
இவர்களில் சில வீரர்கள் ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு சொந்த நாட்டு திரும்பியுள்ளனர். பெங்களூரு அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து லிவிங்ஸ்டோன், ஆன்ட்ரூ டை ஆகியோரும் விலகியுள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தனது குடும்பத்தினர் கொரோனா வைரஸ் பாதிப்பின் அச்சத்தில் இருப்பதால், தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டு வெளியேறியுள்ளார்.,
ஐபிஎல் தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்னும் ஒரு சுற்றுப் போட்டிகள், ப்ளே ஆஃப், எலிமினேட்டர் சுற்று, இறுதிப்போட்டி எஞ்சியுள்ளன.
இந்த நிலையில், தற்போது, 2 அம்பர்யர்கள் விலகுவதாக அறிவித்து உள்ளனர். இதில் ஒருவர் இந்திய நடுவர் நிதின் மேனன். ஆட்டத்தின்போது, துல்லியமாக முடிவு எடுக்க கூடியவர், தவறு செய்யாதவர் என கூறப்படும் நிதின்மேனன் மட்டும்தான் ஐசிசி எலைட் லிஸ்டில் இருக்கிறார். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவரது மனைவி மற்றும் தாயாருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஐபிஎல்லில் நடுவராக இருந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பால் ரெய்பெஃல் இதேபோல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.
வீரர்களைத் தொடர்ந்து, அம்பயர்களும் வெளியேறி வருவது ஐபிஎல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆனால், ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.