புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக வடமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் ஹவுரா விரைவு ரயில், நிரம்பி வழிந்தது.
புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அதன்படி அத்யாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு மே 3ம் தேதி வரை அமலில் இருக்கும். ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் வேலை வாய்ப்பை இழந்த வட இந்திய தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயிலில் புறப்பட்டு செல்ல ஆரம்பித்து உள்ளனர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மூடப்பட்டதால் அங்கு பயிலும் வட இந்திய மாணவர்களும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் புதுச்சேரியில் இருந்து கொல்கத்தா செல்லும் ஹவுரா விரைவு ரயிலில் 22 பெட்டிகளும் நிரம்பி வழிந்தன. உணவு, வேலை இல்லாமல் சொந்த ஊர் திரும்புவதாக வட மாநிலத்தவர்கள் வேதனையுடன் கூறினர்.