கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் வசதிக்காக, தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து 100 மின்விசிறிகளை வாங்கி கொடுத்துள்ளனர் மனித நேயம் மிக்க இளம்தம்பதியினர். இது வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
‘தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கோவையிலும் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, பல மருத்துவமனைகள் நிரம்பி உள்ளன. அங்குள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில், ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அவர்களுக்கு போதுமான காற்று வசதி கிடைக்கவில்லை. போதுமான அளவிலான பேஃன் இல்லாததால், கடுமையான புளுக்கத்தில் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அம்மருத்துவமனையின் மருத்துவர், ஒருவர் இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா வார்டுக்கு மின்விசிறி தேவைப்படுவதாக எப்.எம்.ரெடியோவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இதை கேட்ட, கோவை தம்பதி, தங்களது நகைகளை அடகு வைத்து 100 மின்விசிறிகள் வாங்கிக்கொடுத்து அசத்தி உள்ளனர்.அவர்களின் மனிதநேயம், அங்குள்ள மருத்துவர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மின்விசிறிகளின் மதிப்பு 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.
பெயர் மற்றும் விவரங்களை வெளியிட விரும்பாத தம்பதியின் இந்த மனிதநேய செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.