டில்லி
தனியார் மருத்துவமனைகளில் 10 முதல் 15 நிமிடங்களில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் என டில்லி அரசு உத்தரவு இட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் டில்லியில் தினசரி பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்றுவரை இங்கு சுமார் 10.74 லட்சம் பேர் பாதிக்கபட்டு 15009 பேர் உயிர் இழந்துள்ளனர். இதில் 9.59 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது 98,264 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் பலர் மருத்துவமனைகளில் சேர்க்க கடும் போராட்டம் நடத்த வேண்டி உள்ளது.
இதையொட்டி டில்லி அரசு பிறப்பித்த உத்தரவில் கொரோனா பாதிப்புடன் வரும் நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகளில் 10 அல்லது 15 நிமிடங்களில் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தனியார் மருத்துவமனைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
மருத்துவமனைகளால் தொடரப்பட்ட வழக்கில் தனியார் மருத்துவமனைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கொரோனா பாதிப்படைந்த ஒரு புதிய நோயாளியை மருத்துவமனைகள் ஏற்க வேண்டுமானால் ஒரு பழைய நோயாளியை வெளியேற்றும் நிலை உள்ளது. ஒரு நோயாளிக்காக மற்றொரு நோயாளியைக் கொல்ல முடியுமா?
டில்லி அரசின் இந்த உத்தரவால் மருத்துவமனைகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜனுக்காக போராடும் நோயாளிகள் ஏற்கனவே பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இந்நிலையில் புதிய நோயாளிகளையும் உடனடியாக்ல எப்படி மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியும்?” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.
இதையொட்டி நீதிமன்றம் டில்லி அரசின் உத்தரவு தங்கள் பிரச்சினையை மட்டும் கருத்தில் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது மேலும் இது போன்ற யதார்த்தம் புரியாத உத்தரவுகளை அரசு ஏன் பிறப்பிக்கிறது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.