டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் பல நோயாளிகள் இறந்த நிலையில், தற்போது  ஆக்சிஜன் பற்றாக்குறை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், அதே வேளையில் டெல்லியில் வழக்கத்தைவிட 35% அளவுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனாவின் 2வது அலை நாடு முழுவதும் பரவியுள்ளது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. நாட்டின் தலைநகரான டெல்லி கடுமையான பாதிப்புகு ஆளாகி உள்ளது.  இதற்கிடையில், மருந்து மற்றும்  ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து, நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  வழக்கத்தைவிட 35.02 சதவீதம் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 25ந்தேதி அன்று   50 ஆயிரத்துக்கும் அதிகமாக சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், ஆனால் அதில் அதிக அளவிலான பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அன்றைய தினம் தொற்று பாதிப்பு காரணமாக 380 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக டெல்லியில் நீடித்து வந்த ஆக்சிஜன் பற்றாக்குறை தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் மீண்டும் அனுமதிக்ககப்பட்டு வருகின்றனர். ரயில், விமானம், டேங்கர் என பல தரப்பில் இருந்தும் ஆக்சிஜன் வந்துகொண்டிருப்பதால், ஒரு சில நாட்களுக்கு  ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்றும், தொடர்ந்து ஆக்சிஜன் கிடைத்துக்கொண்டிருலந்தால், உயிரிழப்பு வெகுவாக தடுக்கப்பட்டு விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனைகளான  ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை, பாத்ரா மருத்துவமனை, சர் கங்கா ராம் மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் தற்பொழுது ஆக்சிஜன் போதிய அளவு இருப்பதாகவும் எனவே நோயாளிகளை அனுமதித்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.