நொய்டா: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில்  படுக்கை கிடைக்காத சூழலில் மாவட்ட நீதிபதி, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு மற்றும்  ஆய்வு  காரணமாக, தேவையின்றி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சுமார் 200 படுக்கைகள் உடனடியாக காலி செய்யப்பட்டது.

தொற்று பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல தனியார் மருத்துவமனைகளில், பணம் வாங்கிக்கொண்டு படுக்கை வழங்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.  அதுபோல நொய்டாவிலும் பெரும்பாலான மருத்துவமனை களில் நோயாகிளுக்கு படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால், அப்பாவி பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாத நிலை உருவானது.

இதையடுத்து, நொய்டாவின் மாவட்ட நீதிபதி  (டி.எம்),  சுஹாஸ் எல்.ஒய், தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) தீபக் ஒஹ்ரி உட்பட கவுதம் புத்த நகரின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் ஒரு மெய்நிகர் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது,  நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பது தொடர்பான பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்பட்டது. “மாவட்டத்தின் ஒவ்வொரு கோயிட் -19 நோயாளிக்கும் மாநில அரசின் அறிவுறுத்தலின் படி அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அதிரடியாக ஆய்வு நடத்தவும்  உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) தலைமையிலான குழுவினர், நொய்டா பகுதியில் உள்ள  பல்வேறு நகர மருத்துவமனைகளைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, நொய்டா, கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள கிம்ஸ், யதர்த், கைலாஷ், ஷார்தா, ஜெய்பீ, ஃபோர்டிஸ், பிரகாஷ், பிரிவு 39 கோவிட் மருத்துவமனை, இந்தோகல்ஃப், ஜேஆர் மருத்துவமனை, எஸ்ஆர்எஸ் மருத்துவமனை, சூர்யா மற்றும் மெட்ரோ மருத்துவமனைகளில் அதிரடியாக ஆய்வு நடத்தினர். இதில், நூற்றுக்கணக்கான படுக்கைகள் தேவையின்றி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தனியார் மருத்துவமனைகளில் பலரும் தேவையில்லாமல் படுக்கையில் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம், உடடினயாக பலரை டிஸ்சார்ஜ் செய்து, படுக்கைகள் காலியாக இருப்பதாக அறிவித்தன. இதனால், சுமார் 200 க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கூறிய சுகாதாரத்துறை அதிகாரிகள், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவமனைகள், மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்த தகவல்களை வெளியிடும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.