புதுடெல்லி: இந்திய தலைநகரில், கட்டுக்கடங்காமல் போன கொரோனா மரணங்களால், தென்கிழக்கு டெல்லியிலுள்ள ஒரு பூங்கா, மயானமாக மாற்றப்பட்டுள்ள கொடுமை அரங்கேறியுள்ளது.

டெல்லியைப் பொறுத்தமட்டில், அங்குள்ள மயானங்கள், கொரோனா பிணங்களால் நிரம்பி வழிகின்றன. தென்கிழக்கு டெல்லியிலுள்ள ஒரு சுடுகாடான சராய் காலே கானின் பணியாளர் கூறுகையில், “இந்த சுடுகாட்டில் 20 எரிமேடைகள் மட்டுமே உள்ளன. அவற்றுள் 2 எலக்ட்ரானிக் எரிமேடைகளாகும்.

ஆனால், அந்த இரண்டில், தற்போது ஒன்று மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது. கடந்த சனியன்று, இம்மாயனத்திற்கு 27 உடல்களும், ஞாயிறன்று 30 உடல்களும் வந்தன. ஆனால், அந்தளவிற்கு இந்த சுடுகாட்டில் இடமில்லை. எனவே, அந்தப் பூங்காவில், புதிதாக 20 எரிமேடைகள் அமைக்கப்பட்டால், சூழலை சமாளித்துவிடலாம்” என்றார் அவர்.

டெல்லியில் நிலவும் தகனப் பிரச்சினையால், மக்கள் பெரும் இடர்பாடுகளுக்கு ஆளாகியுள்ளனர். மயானங்களில், தங்கள் உறவினர்களுக்கான இறுதிச்சடங்கை நிறைவேற்ற மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர்.

டெல்லியிலுள்ள பல மயானங்களுக்கு, நீண்ட தொலைவுகளில் இருந்தெல்லாம் கொரோனா பிணங்கள் கொண்டுவரப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்புலன்சில், ஒரேநேரத்தில் 3 அல்லது 4 பிணங்களெல்லாம் அனுப்பி வைக்கப்படுகின்றன.