புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாண்டவமாடிவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு, சூழல் தொடர்பாக பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

இதன்மூலம், இந்திய கொரோனா பரவல் விஷயத்தில், அமெரிக்கா தொடர்ந்து மெளனமாகவே இருந்துவருகிறது என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த உரையாடல் தொடர்பாக பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, “அமெரிக்க அதிபருடன் இன்று பயன்மிகு உரையாடலை நிகழ்த்தினேன். இரண்டு நாடுகளிலுமே நிலவும் கொரோனா பரவல் சூழல் குறித்து நாங்கள் உரையாடினோம். அப்போது, கொரோனா தொடர்பாக, இந்தியாவுக்கு, அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவுக்கு, பைடனிடம் நன்றி தெரிவித்தேன்.

இலகுவான மற்றும் திறன்மிகுந்த முறையில் கொரோனா தடுப்பு மருந்துகள், மூலப் பொருட்கள் மற்றும் மருந்துகளை பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து எங்கள் உரையாடல் இருந்தது. இந்திய – அமெரிக்க சுகாதார கூட்டிணைப்பானது, உலகளாவிய கொரோனா சவாலை சமாளிக்க வல்லது” என்றுள்ளார் மோடி.