சென்னை: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையம் கடந்த 9 ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்தியஅரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தடுப்பூசி மையம் ஏற்படுத்த தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. கடந்த  2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அன்புமணி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.  இதைத்தொடர்ந்து, கடந்த  2012-ஆம் ஆண்டுமன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செங்கல்பட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் தடுப்பூசி தயாரிப்பு மையம் அமைக்க அனுமதியளித்தது.

அதன்படி, இந்த மையதான அனைவருக்கும் நோய்த்தடுப்பு என்ற (universal Immunization programme) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இம்மையத்தின் மூலம் தடுப்பூசி தயாரிப்பு, ஆராய்ச்சி ஆகியவை நடத்த வழிவகை செய்யப்பட்டது.  இந்த மையத்தை அமைக்க 600 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் 2019-ஆம் ஆண்டு 904 கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.

இந்த தடுப்பூசி மையத்தில் இதுவரை எந்தவொரு நோய்க்கும் மருந்துகள் தயாரிக்கப்படாத நிலையில்,  இந்த மையம் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் பலர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்

இதையடுத்து, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை கடந்த ஜனவரி மாதம் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு செய்தார்.  அதைத்தொடர்ந்து,  இந்த மையத்தில் தடுப்பூசி தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  ஆனால், இதுவரை எந்தவொரு  தனியார் நிறுவனமும் தடுப்பூசி தயாரிக்க முன்வராத நிலையில், மத்தியஅரசோ, மாநில அரசோ, தடுப்பூசிகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டாத அவலமும் தொடர்ந்து வருகிறது.

ஆனால், தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்தியால் தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனமான சீரம் நிறுவனம் தடுப்பூசியின் விலையை இரு மடங்காக உயர்த்தி உள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவும்  முயற்சிகள் நடைபெற்ற வருகின்றன.

இதற்கிடையில், நாடு முழுவதும் மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால்   தடுப்பூசி தேவை அதிகிரித்துள்ளது.

இந்தச் சூழலில் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையம் கொரோனா தடுப்பூசி தயாரிக்க பயன்படுத்தலாம் என கோரிக்கை எழுந்துள்ளது.  இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முடிவு எடுத்து , மூடிக்கிடக்கும் தடுப்பூசி மையத்தை உடனே திறந்து, தடுப்பூசிகளை தயாரிக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த தடுப்பூசி மையம் குறித்து கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 8ந்தேதி  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  இந்தியாவின் தடுப்பூசிகள் தேவையை பூர்த்தி செய்வதற்காக டாக்டர் அன்புமணி ராமதாசின் முயற்சியால் செங்கல்பட்டில் அமைக்கப்பட்டு உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்காவை மூட முயற்சிகள் நடப்பதாக வெளிவரும் செய்திகள் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கின்றன.

செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவில் உற்பத்தி செய்யப்பட உள்ள மருந்துகள் அனைத்தும் உலகத்தரம் வாய்ந்தவை என்பதால், அவற்றின் இந்தியாவின் தேவைக்கு போக மீதம் உள்ள தடுப்பூசி மருந்துகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். அவற்றை வாங்கி கொள்ள உலக நாடுகள் தயாராக உள்ளன. இது மத்திய அரசின் எந்த பொதுத்துறை நிறுவனத்துக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு ஆகும்.

ஆனால் தடுப்பூசி பூங்காவை அமைக்கும் ‘எச்.எல்.எல். பயோடெக்கின்’ தாய் நிறுவனமான ‘எச்.எல்.எல் லைப் கேரை’ பங்கு விற்பனை மூலம் தனியாருக்கு தாரை வார்க்க இருப்பது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். எச்.எல்.எல் பயோடெக்கை தனி பொதுத்துறை நிறுவனமாக மாற்றி மத்திய அரசே நடத்தலாம். ஒருவேளை இது மத்திய அரசால் சாத்தியமாகாத நிலையில், நெய்வேலி, நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீதம் பங்குகளை வாங்கியது போன்று, அதிக லாபம் ஈட்டக் கூடிய தடுப்பூசி பூங்காவையும் தமிழக அரசு வாங்கி நடத்த வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]