சென்னை: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால்,  சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு 20% ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. முன்னதாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்து இயக்கப்படாது என தெரிவித்திருந்த நிலையில், 20 சதவிகித பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்,  ஏப்ரல் 20 முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு நேரத்தில் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பகலில்  மட்டும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தென்மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை கேள்விக்குறியானது. வழக்கமாக 700 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில்,  பேருந்துகள் இயக்கப்படுவதில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது தென் மாவட்டங்களுக்கு 20% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிட்டுள்ளது. இன்று காலை சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.