டெல்லி: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், பல மாநிலங்களில் பகுதி நேர லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் வணிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
பல மாநிலங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு குறித்து, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் முதன்மை செயலாளர்களுடன் மதிதிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் நிதி காரே ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஒவ்வொரு மாநிலத்திலும் இருப்பில் உள்ள அத்தியாவசிய பொருட்கள், அதன் விலை நிலவரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மருந்துகள், சுகாதார பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்த்தப்படாமல், நியாயமான விலையில் அவற்றை கிடைக்க செய்வது குறித்தும், மாநிலங்களின் தேவை மற்றும் விநியோகம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், அத்தியாவசிய பொருட்களை தடுக்கும் வகையில், உணவு மற்றும் பொது விநியோகம், சட்ட அளவியல், உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் காவல் ஆகிய துறைகள் அடங்கிய இணை குழுக்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லாக்டவுன் காரணமாக, அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை அதிகளவில் மக்கள் வாங்குவதைத் தடுப்பதற்கு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீறி பதுக்கி வைக்கும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.