மும்பை: கொரோனா தடுப்பு மருந்து சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருக்கையில், கொரோனா மரண சான்றிதழிலும் அவரின் படம் இடம்பெற்றிருப்பதே சரியானது என்று போட்டுத் தாக்கியுள்ளார் மராட்டிய மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான நவாப் மாலிக்.
கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக, பிரதமர் மோடி பெருமை தேடிக்கொள்ள முயன்றால், கொரோனா மரணத்திற்கான பெருமையும் அவருக்கத்தான் சென்றடைய வேண்டும் என்றுள்ளார் அவர்.
அவர் மேலும் கூறியதாவது, “கொரோனா தொற்று நாட்டில் அதிகரித்துவரும் நிலையில், அதன் விளைவான மரணங்களும் அதிகரித்து வருகிறது. மயானங்களில், அதிகரித்துவரும் கொரோனா பிணங்களை கையாள முடியாத நிலை உள்ளதாக வீடியோ பதிவுகள் தெரிவிக்கின்றன.
எனவே, தற்போதைய அவல நிலைக்கு மத்திய மோடி அரசு கட்டாயம் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் இதுதொடர்பாக பதிலளிப்பதிலிருந்து மோடி அரசு தப்ப முடியாது” என்றுள்ளார் அவர்.