சென்னை: சளி, இருமல் இருப்பவர்கள் ரயிலில் பயணம் செய்ய வர வேண்டாம் என்றும், ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் ரயில் சேவை நிறுத்தப்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், “கொரோனா பாதிப்புள்ள இந்தக் காலத்தில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள ரயில்வேயின் அறிவுறுத்தல்படி, தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தெற்கு ரயில்வேயில் மொத்தமுள்ள ரயில்களில் 75 சதவீத பயணிகள் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. தேவைப்பட்டால் கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்து பிறகு அறிவிக்கப்படும். சமூக வலைதளங்களில் பரவும் போலி தகவல்கள் யாரும் நம்ப வேண்டாம். பயணிகளுக்கான அதிகாரப்பூர்வமான தகவல்களை ரயில்வே அறிவிக்கும்” என்றார்.
மேலும், மின்சார ரயில்களில் பயணிகள் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். பயணிகளுக்கு ஏற்கெனவே இருக்கும் நேரக்கட்டுப்பாடுகள் ரயில் சேவைகள் தொடரும். பயணிகள் ரயில் நிலையங்கள், ரயில்களில் செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி இருப்பவர்கள் ரயில்களில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.