மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,  மும்பை உள்பட பல பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில் 700 தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு உள்ளது. சத்தீஸ்கர், ஹரியானா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  ஆனால்,  போதிய அளவு தடுப்பூசி மருந்துகளை மத்தியஅரசு வழங்கவில்லை என்று மாநில அரசுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஏற்கனவே ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் மத்தியஅரசு அதிக அளவிலான தடுப்பூசிகளை தர வேண்டும் என்று வலியுறுத்தி வருவதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், கொரோனா தடுப்பு மருந்து நமது மக்களுக்கு தேவைப்படும்போது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தேவையா என கேள்வி எழுப்பியதுடன், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நிலையில்,  மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.  மும்பையில்  120 மையங்களில்  தடுப்பூசி போடப்பட்டு  வந்த நிலையில், மருந்து இருப்பு இல்லை என்று கூறி 75 மையங்கள்  மூடப்பட்டு உள்ளன.
மும்பை  பெருநக  மாநகராட்சியின் பி.கே.சி. பிரமாண்ட மையத்தில் 200 பேருக்கு மட்டும் தடுப்பூசி போட்ட பின்னர் அந்த மையம் மூடப்பட்டது.

தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டதால், ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாமல் புலம்பியபடி திரும்பி சென்றனர். தடுப்பூசி தட்டுபாடு குறித்து மகாராஷ்டிரா அரசுக்கும், மத்தியஅரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.மகராஷ்டிரா மாநிலத்திற்கு வழங்கப்பட்ட மருந்தில் பாதி அளவு வீணடிக்கப்பட்டு உள்ளதாகவும்,  மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதுபோல ஒடிசாவிலும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள 700 மையங்கள் மூடப்பபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  சத்தீஸ்கர், ஹரியானா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற பிற மாநிலங்கள் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.