நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாஸ்டர் திரைப்பட வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் தளபதி விஜய். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வருகிறது படக்குழு.
மார்ச் 31 சென்னையில் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 2 நாட்கள் மட்டும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின்பு தேர்தல் முடிந்தவுடன் முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது.
2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளது. தளபதி 65 படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டெ நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படத்தில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
தளபதி 65 படத்தில் சண்டை இயக்குநர்களாக இரட்டையர்கள் அன்பறிவ் பணியாற்றுகிறார்கள். மெட்ராஸ், கபாலி, கைதி போன்ற படங்களில் பணியாற்றிய இவர்கள், கே.ஜி.எப் 1 படத்திலும் சண்டை இயக்குநர்களாக பணியாற்றியிருந்தனர். அதோடு அந்தப் படத்தின் சிறப்பான சண்டைக் காட்சிக்காக தேசிய விருதையும் பெற்றனர்.
’துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால், தளபதி 65 படத்திலும் வில்லனாக நடிப்பதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வலம் வருகின்றன. இதற்கு ”நான் காத்திருக்கிறேன். அதோடு அவ்வாறு நடிக்க விரும்புகிறேன். ஆனால் இது தவறான செய்தி” என்று தெரிவித்திருக்கிறார் வித்யூத் ஜம்வால்.
இந்நிலையில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யும், இயக்குனர் நெல்சனும் பேசி கொள்வது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்திற்கு ‘தளபதி 65’ படப்பிடிப்பு துவக்கம் எனவும் கேப்சன் கொடுக்கபட்டுள்ளது.
#Thalapathy65 shooting has started in Georgia! @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja pic.twitter.com/tuMnc5393k
— Sun Pictures (@sunpictures) April 9, 2021