மும்பை: தடுப்பூசிகளை மோடி அரசு பிற நாடுகளுக்கு வழங்குவதற்கு பதில், மருந்து பற்றாக்குறையால் தத்தளிக்கம், நமது சொந்த மாநில மக்களுக்கு வழங்குங்கள் என மகாராஷ்டிரா அமைச்சர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில், தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதால், அங்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் இல்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து, மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே ஏற்கனவே மத்தியஅரசுக்கு கூடுதலாக தடுப்பு மருந்து அனுப்பக்கோரி கடிதம் எழுதி உள்ளார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப், மாநிலத்துக்கு தேவையான தடுப்பு மருந்துகளை தர மத்தியஅரசு மறுத்து வருகிறது என்று குற்றம் சாட்டியவர், மகாராஷ்டிராவை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட குஜராத் மாநிலத்துக்கு இதுவரை 1 கோடி தடுப்பூசிகள் கிடைத்துள்ளன, ஆனால், எங்களுக்கு 1.04 லட்சம் தடுப்பூசி மருந்துகள் மட்டுமே கிடைத்துள்ளன என்று சுட்டிக்காட்டியவர், எங்களுக்கு கூடுதலான தடுப்பு மருந்துங்களை தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு வாரமும் குறைந்தது 40 லட்சம் தடுப்பூசி எங்களுக்கு தேவைப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனால் மாதத்திற்கு 1.6 கோடி தடுப்பூசிதேவைப்படுகிறது என்றும், பல மையங்களில் போதிய தடுப்பூசி இல்லாததால், தற்காலிகமாக அவை மூடப்பட்டு உள்ளது.
மத்தியஅரசு எங்களுக்கு உதவ மறுக்கிறது என்று குற்றம் சாட்டியவர், நமது சொந்த மக்களுக்கு தேவைகள் இருக்கும்போது, பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏன் வழங்க வேண்டும், அவற்றை நம் சொந்த மாநிலங்களுக்கு வழங்குங்கள் ராஜேஷ் டோப் வலியுறுத்தினார்.