ஜொகன்னஸ்பர்க்: இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக், தன்னை ஏமாற்றி ரன்அவுட் செய்யவில்லை என்றும், தவறு தன்னுடையதே என்றும் பெருந்தன்மையாக பேசியுள்ளார் பாகிஸ்தானின் ஃபக்கர் ஸமான்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், அந்த அணி நிர்ணயித்த 342 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில், கிட்டத்தட்ட தனி ஆளாக போராடினார் ஸமான். 155 பந்துகளை சந்தித்து 193 ரன்கள் எடுத்திருந்தபோது, சர்ச்சைக்குரிய முறையில் ரன்அவுட் ஆனார் ஸமான்.

இவர் கீப்பர் முனையை நோக்கி ஓடிவரும்போது, இவரின் வேகத்தை மட்டுப்படுத்தும் விதமாக, கீப்பர் குவின்டன் டி காக், பெளலர் முனையை நோக்கி சைகை செய்து, பந்தை அங்கே எறிய சொல்கிறார் என்று ஸமானை நினைக்க வைத்து ஏமாற்றி, பின்னர், நேரடி த்ரோவின் மூலம், கீப்பர் முனையில் ரன்அவுட் செய்யப்பட்டார் ஸமான். அந்த சைகை இல்லையென்றால், அவர் விரைவாக ஓடிவந்து இலக்கை அடைந்திருப்பார் என்று கூறப்படுகிறது. எனவே, டி காக் செய்தது விளையாட்டு உணர்வுக்கு மீறிய செயல் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான், அது தனது தவறுதான் என்று கூறியுள்ளார் ஸமான்.

அவர் கூறியிருப்பதாவது, “தவறு என்னுடையதுதான். எதிர்முனையில் ஹாரிஸ் ராவுஃப் ரீச் செய்கிறாரா என்பதிலேயே என் கவனம் சென்றதால் தவறு என்னுடையதுதான். ஏனெனில், ராவுஃப் அந்த ரன்னுக்கு சற்றே தாமதமாகப் புறப்பட்டார். எனவே அவர்தான் பிரச்சினையில் இருக்கிறார் என்று நான் கருதினேன். மற்றது, ஆட்ட நடுவர் என்ன கூறுகிறாரோ அதுதான் என்னுடையதும். ஆனால், இது நிச்சயம் டி காக்கின் தவறு அல்ல” என்றுள்ளார் ஸமான்.

அவரின் இந்தக் கருத்து, பலரின் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது.