டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் ஓயும் நிலையில் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதே போன்று புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களிலும் ஏப்ரல் 6ம் தேதியன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கிவிட்டதால் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் உள்ளனர். அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நாளை இரவு 7 மணியுடன் ஓய்கிறது.

ஆகவே அடுத்த கட்டமாக அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

ஏப்.4 இரவு 7 மணிமுதல் வேட்பாளர்கள் பொதுக்கூட்டமும், ஊர்வலமும் நடத்தக்கூடாது. திரையரங்கம் மூலமாகவோ, தொலைக்காட்சி மூலமாகவோ பிரசாரம் செய்யக்கூடாது. வாக்கு பதிவு நாளன்று ஒரு வேட்பாளருக்கு அதிகபட்சமாக 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வர வாகனங்கள் பயன்படுத்தக்கூடாது. வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்தில் இருந்து 200 மீட்டர் தள்ளி தற்காலிக பூத் அமைக்கலாம். வாக்குச்சாவடியில் வாக்காளராக உள்ள 2 பேர் மட்டுமே இருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.