காரைக்குடி: 180 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெற்றால்தான், பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது என்று மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வேற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும். தமிழகத்திற்கு ‘மோடி, அமித் ஷா, நட்டா என பாஜக தலைவர்கள் பலரும்  படையெடுக்கின்றனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் கலவரம் வெடிக்கிறது. மோடி தமிழகம்  வந்தவுடன் ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடக்கிறது. இது பாஜவுக்குக் கைவந்த கலை என்றார்.

பெண்கள் நலன் பற்றிப் பேச அருகதை அற்ற கட்சி பாஜக. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் தமிழக அரசியலில் மீண்டும் தன்மானம் உயரும். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதுதான் எங்களுக்குத் தெரியும். ஆனால், பாஜக கற்றுத் தரும் பாடம் தேர்தல் திருட்டு. அது எங்களுக்குத் தெரியாது. கற்றுக்கொள்ளவும் மாட்டோம்.

இந்த தேர்தலில்  திமுக கூட்டணி 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால்தான், பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது.  ஏப்ரல் 6-ந்தேதிக்குப் பிறகு போலீஸாரைக் காட்டிலும், நாங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கண்காணிப்போம். தேர்தல் ஆணையம் முழு சுதந்திரத்துடன் செயல்படுகிறது என்று சொல்ல முடியாது.

இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.