திஸ்புர்: அஸ்ஸாம் மாநிலத்தில் இதுவரை ரூ.110 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
அஸ்ஸாம் மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கடந்த மார்ச் 27ம் தேதி 47 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று 2ம் கட்டமாக 39 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அஸ்ஸாபம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி நிதின் கடே, மாநிலத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 31ந்தேதி வரையில், ரூ. 110.83 கோடி மதிப்பிலானவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இவற்றில் 33.44 கோடி ரூபாய் மதிப்பில் 16.61 லட்சம் லிட்டர் மதுபானம், 24.50 கோடி ரூபாய் ரொக்கம், 34.29 கோடி ரூபாய் மதிப்பில் போதை பொருட்கள், 3.68 கோடி ரூபாய் மதிப்பில் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் தங்க கட்டிகள், மேலும் 14.91 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்கள், மிளகு, கசகசா விதைகள், பான் மசாலா போன்ற இலவசமாக வழங்கப்படவிருந்த பொருட்களையும் பறக்கும் படையினர் பபறிமுதல் செய்யப்பட்டுள்ளனன.
இதுவரை இல்லாத அளவுக்கு மாநில தேர்தல் வரலாற்றில் முந்தைய சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் விதிமீறல் தொடர்பாக 5,234 வழக்குகள், தேர்தல் செலவு விதிகளை மீறியதாக 50 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.