சென்னை

சென்னையில் 378 தெருக்கள் கொரோனா அதிகரிப்பால் தனிமைப்படுத்த பட்டுள்ளன..

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.,   இதில் தமிழகமும் ஒன்றாகும்.  தமிழகத்தில் சென்னை நகரில் அதிக அளவில் பாதிப்புக்கள் காணப்படுகின்றன.  நேற்று வரை சென்னையில் 2,48,965 பேர் பாதிக்கப்பட்டு 4,243 பேர் உயிர் இழந்துள்ளனர்.  மேலும் 2,38,467 பேர் குணம் அடைந்து 6,255 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி சென்னையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.   சென்னை தெருக்களில் மூன்று முதல் நான்குபேர் அல்லது 2க்கு மேற்பட்ட வீடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த தெருக்கள் தனிமைப் படுத்தப்படுகின்றன.   அதே வேளையில் முன்பு போல் அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை.  வீட்டு அளவில் மட்டும் தனிமை கடைப்பிடிக்கப்படுகிறது.

தற்போது வரை சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 378 தெருக்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன  இந்த தெருக்களில் மொத்தம் 4,163 வீடுகள் முழு தனிமையில் உள்ளன்.   இதில் அதிக பட்சமாக தேனாம்பேட்டையில் மட்டும் 84 தெருக்களில் 553 வீடுகள் தனிமையில் உள்ளன.   அடுத்ததாக ராயபுரத்தில் 56 தெருக்களில் 401 வீடுகள் தனிமையில் உள்ளன.

மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கு வாக்கெடுப்பு தினத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில் பிபிஇ உடைகளுடன் சென்று வாக்களிக்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.     இவ்வாறு வாக்களிக்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பகுதியின் சுகாதார ஆய்வாளரை அணுகினால் அவர் உதவுவார் எனவும் தெரிவித்துள்ளார்.