கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில்
இத்தலத்தின் மூலவர் குழகேஸ்வரர், தாயார் மைத்தடங்கண்ணி. இத்தலத்தின் தல விருட்சமாக குரா மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் அமுதக்கிணறும் உள்ளன.
இத்தல இறைவனாரை இந்திரன், சுவேத முனிவரின் மகன் பிரமன், நாரதர், குழகமுனிவர், சித்தர்கள் முதலானோர் வழிபட்டுள்ளனர்.
திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவருலகிற்கு எடுத்துச் சென்ற போது அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாக ஆயிற்று என்று தல வரலாறு கூறுகிறது.
சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வந்த சுந்தரர், கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்திப் பாடியதாக வரலாறு சொல்லப்படுகிறது. இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற தலமுமாகும். தட்சிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் தல தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பு எனக் கருதுகின்றனர்.
இத்தலத்து முருகப்பெருமான் ஓர் முகமும், ஆறு கரங்களும், ஏனைய ஆயுதங்களுடன் ஒரு திருக்கரத்தில் அமுதக் கலசமும் ஏந்தியிருக்கிறார். அமுதக் கலசம் ஏந்தியிருப்பது தலபுராணம் தொடர்புடையதாக இருக்கலாம். இத்தலத்து விநாயகரும் அமிர்த விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
கடற்கரையிலுள்ள சித்தர் கோயிலில் சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக நம்பப்படுகிறது. நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன; இத்தலம் கோளிலி தலம் எனப்படுகிறது.
இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோடியக்காடு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.