சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் குமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரும் 3ந்தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டச்பை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அனல் பறக்கம் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேசிய தலைவர்களும்  தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஏப்ரல் 3-ம் தேதி  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தமிழகம் வருகைத் தருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அன்றைய தினம் காலை சென்னை வரும் பிரியங்கா,  தனது தந்தை மறைந்த ராஜீவ் காந்தியின்  ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.  பின்னர் பிற்பகல்  சென்னையில் இருந்து  நாகர்கோவிலுக்கு சென்று அங்கு நடைபெற உள்ள காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். குமரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், குமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்துக்கு ஆதரவாகவும் அவர் பிரசாரம் செய்கிறார்.