சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் ஸ்டாலின் குடும்பத்தினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதில், உதயநிதியின் தாயார், மனைவி உள்பட அவர்களது குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தற்போது, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக, அங்கு வாக்கு சேகரிப்பில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில், அவரது தாயாரும், ஸ்டாலினின் மனைவியுமான துர்கா ஸ்டாலின் களமிறங்கி உள்ளார். அவருடன் உதயநிதியின் மனைவி மற்றும் குடும்பத்தினரும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
நேற்று மாலை, சென்னை மெரினா கடற்கரை அருகே அயோத்தி குப்பம் பகுதியில் உள்ள பெண்களைசந்தித்து ஸ்டாலின் குடும்பத்தினர் வாக்கு சேகரித்தனர். அங்கு பேசிய துர்கா ஸ்டாலின், இந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகஉதயநிதி தேர்வு செய்யப்பட்டால், உங்களின் அனைத்து பிரச்சினைகளும் கட்டாயம் தீர்த்து வைக்கப்படும்” என்றார். வாக்கு சேகரிப்பின்போது, ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் துர்காஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.