புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், பிரபல தொழிலதிபர் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். இன்று பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வரும் நிலையில், சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியை கைப்பற்ற என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பாஜக, அதிமுக கூட்டணியுடன் களமிறங்கி உள்ளது. அங்கு பிரசாரம் களைகட்டியுள்ளது.
தேர்தலையொட்டி, கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியுள்ள தேர்தல் ஆணையம் பல இங்களில் வாகன சோதனையை நடத்தி வருகிறது. அதுபோல வருமான வரித்துறையினரும் அதிரடியாக ரெய்டுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரது இல்லம் மற்றும் அவரது உறவினர்களின் இல்லத்தில் வருமானவரித்துறை சோதனை நடக்கிறது.
இன்று மாலை 4 மணிக்கு பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி புதுச்சேரிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள வரவுள்ள நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.