சென்னை: சென்னையின் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதைனைடியல் ஒரே நாளில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறது. பல இடங்களில் சோதனைகளை வருமான வரித்துறை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய்களை பறிமுதல் செய்து வருகிறது.

சென்னையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டு உள்ளது.தியாகராய நகரில் காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள், தங்க காசுகள் மற்றும் வைரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை  அண்ணாநகரில்  நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது,  ஆசிப் என்ற தொழிலதிபரிடமிருந்து 48 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சைதாப்பேட், ஐஸ்அவுஸ் போன்ற இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையிலும்  4 கோடியே 62 லட்சத்து 73 ஆயிரத்து 810 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கோட்டூர்புரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 7 லட்சத்து 21 ஆயிரத்து 928 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும்,   நந்தனத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.