யாங்கூன்
மியான்மர் ராணுவ ஆட்சியால் நாட்டை விட்டு இந்தியா குடியேறும் அகதிகள் இந்திய அரசால் வெளியேற்றப்படலாம் என அச்சம் நிலவுகிறது.
மியான்மர் நாட்டில் நடைபெறும் ராணுவ ஆட்சியின் அடக்குமுறையால் அதை எதிர்த்து போராடுவோர் கண்மூடித்தனமாகச் சுட்டு வீழ்த்தப்படுகின்றனர். அச்சமடைந்த பலர் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாகக் குடியேறி வருகின்றனர். தற்போது இந்தியாவுக்கு ஓடி வரும் மியான்மர் அகதிகள் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து வருகிறது.
மியான்மர் நாட்டு எல்லைப்பகுதிகளில் இந்தியாவின் மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அமைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான கிமீ எல்லையை மியான்மருடன் இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இதில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோரே போன்ற நகரங்களுக்கு விசா இல்லாமலே மியான்மார் மக்கள் வந்து செல்ல முடியும்.
தற்போது மியான்மரில் ராணுவ ஆட்சி அமலில் உள்ளதாலும் அங்கு போராட்டங்கள் கடுமையாக உள்ளதாலும், மத்திய அரசு எல்லைகளைச் சீல் வைத்துள்ளது. அத்துடன் மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருவதைத் தடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மிசோரம் மாநில முதல்வர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மனிதாபிமான அடிப்படையில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.
மிசோரம் மாநிலத்தில் கிட்டத்தட்ட 1000 மியான்மர் அகதிகள் தஞ்சம் புகுந்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் மியான்மர் எல்லையை ஒட்டிய சம்பாய் மாவட்டத்தில் மட்டும் பலர் தஞ்சம் அடைந்துள்ளனர். இதைப்போல் மணிப்பூர் மாநிலமும் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது. துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பியவர்களும் காயம் அடைந்தோரும் மோரோ நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஐநா சபையின் அகதிகள் குறித்த ஒப்பந்தத்தில் இந்தியா இதுவரை கையெழுத்து இடவில்லை. எனவே மாநில அரசு மற்றும் மக்கள் மியான்மர் அகதிகளுக்கு ஆதரவு அளித்தாலும் மத்திய அரசு அவர்களை மீண்டும் மியான்மாருக்கு நாடு கடத்தும் அபாயம் உள்ளது. மியான்மரின் மற்றொரு அண்டை நாடான தாய்லாந்தும் அகதிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் அங்குக் குடி புகுந்துள்ள மியான்மர் அகதிகளுக்கும் இதே அச்சம் உள்ளது.