சென்னை

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29 வரை வெளியேற்று வாக்கெடுப்பு (Exit Poll) முடிவுகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

வரும் 6 ஆம் தேதி அன்று தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.   இந்த தேர்தலில் திமுக, அதிமுக, மநீம, அமமுக ஆகிய கட்சிகளின் அணிகள் மோதுகின்றன. நாதக தனியே களத்தில் உள்ளது.   அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  வரும் மே மாதம் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து அன்றே முடிவுகள் வெளியாக உள்ளன.

தேர்தலையொட்டி பல கருத்துக் கணிப்புக்கள் வெளியாகி வருகின்றன.  பெரும்பாலான கருத்துக் கணிப்புக்களில் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் அணி வெற்றி வாய்ப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.  ஒரு சில முடிவுகள் அதிமுக அணிக்குச் சாதகமாக உள்ளன.   இறுதி முடிவு வாக்கெடுப்பில் தெரிய வரலாம் என்க கூறப்படுகிறது.

எக்சிட் போல் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெளியேற்று வாக்கெடுப்பு தேர்தல் நேரத்தில் நடத்தப்படுவதாகும்.   தேர்தலில் வாக்களித்து விட்டு வெளியே வருபவர்களிடம்  யாருக்கு வாக்களித்தார்கள் எனக் கேட்டறிந்து அந்த முடிவுகளை வெளியிடுவது வழக்கமாகும்.

இந்நிலையில் இன்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழகத்தில் அனைத்து வெளியேற்று வாக்கெடுப்பு முடிவுகளையும் ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 7.30 மணி வரை வெளியிடத் தடை விதித்துள்ளார்.

மேலும் அவர் அனைத்து  கருத்துக் கணிப்புக்கLin முடிவையும்  வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு  வெளியிடலாம் எனவும் அதற்கு பிறகு வெளியிட  தடை விதித்துள்ளார்..