ம்பாசமுத்திரம்

திமுக கூட்டணியில் உள்ள ஐ யு எம் எல் கட்சித் தலைவர் காதர் மைதீன் புகைப்படம் அதிமுக தேர்தல் பிரசார பேனரில் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் 1957 ஆம் வருட சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லீம் லீக் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தது.  அதன் பிறகு பல்வேறு பிரிவுகளாக அந்த கட்சி பிளவு பட்டது.  தற்போது இஸ்லாமிய அமைப்புக்கள் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அவ்வகையில் ஐ யு எம் எல் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) கட்சியும் அதே கூட்டணியில் இடம் பெற்று கடையநல்லூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா போட்டி இடுகிறார்.   அவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செயல்வீரர்கள் கூட்டம் என மும்முரமாகப் பிரசாரம் செய்து வருகிறார்.  அவ்வகையில் சமீபத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் மேடையில் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அந்த பேனரில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெற்றுள்ளது. இத்துடன் பாஜகவின் மோடி, அமித்ஷா, ஜேபிநட்டா, தமிழக தவைர் எல்.முருகன், பாமக தலைவர் ராமதாஸ், ஜிகே.வாசன், ஜாண்பாண்டியன் படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வரிசையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீன் படமும் இடம் பெற்றுள்ளது.

தொடர்ந்து திமுக கூட்டணியில் இடம் பெற்று வரும் காதர் மைதீன் புகைப்படம் அதிமுக பேனரில் இடம் பெற்றது மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.   இது குறித்து அதிமுக நிர்வாகி ஒருவர், “விளம்பர நிறுவனத்திடம் கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் படத்தைப் போட கேட்டுக்கொண்டோம். நிறுவனம் தவறுதலாக காதர் மைதீன் போட்டு விட்டனர். ஏதோ இஸ்லாமியர் படம் போட்டிருக்கிறோம். அவ்வளவுதான் இதெல்லாம் பெரிதாக்க வேண்டாம்” எனக் கூறி உள்ளார்.