சென்னை
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெளியூரை சேர்ந்தவர்கள் வாக்களிக்க 14,215 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் இதையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் ஆணையம் இம்முறை அதிக அளவில் வாக்காளர்கள் வாக்களிக்கப் பல வசதிகள் செய்துள்ளன. மேலும் கொரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.
வெளியூர்களில் தங்கிப் பணி புரிவோர் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க வசதியாகத் தமிழக அரசு போக்குவரத்துத்துறை ஏப்ரல் 1 முதல் 5 வரை சென்னையில் இருந்து தினசரி 3,090 சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது. மேலும் கோவை திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்தும் 2,644 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் 5 இடங்களில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவை பண்டிகை நாட்களில் இயக்கப்படுவது போல் கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், தாம்பரம் மீப்ஸ், மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.. அவ்வகையில் மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.