சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக நாங்கள் எந்தவொரு கருத்துக்கணிப்பும் நடத்தவில்லை என சென்னை லயோலா கல்லூரி சார்பில் திடீர் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ’தேர்தல் போக்கு விமர்சனங்களில் எங்கள் பங்களிப்பு இல்லை’ என லயோலா கல்லூரி முதல்வர் அறிவித்து உள்ளார்.
தமிழக அரசியல் களத்தில், லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு பெரும் தாக்கத்தை உருவாக்கி வந்தது. ஆனால், கடந்த சில கருத்துக்கணிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தின. தற்போது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு என்னாச்சி என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதற்கிடையில், லயோலா கல்லூரி நிர்வாகம் வெளியிட்டதாக, ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது இதுவும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில் லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில், அதன் முதல்வர் தாமஸ் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
“லயோலா கல்லூரி 2021ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக எந்த வகையிலும் கருத்துக்கணிப்பு நடத்தவில்லை. தேர்தல் போக்குகளை பற்றிய விமர்சனங்களை வழங்குவதில் கல்லூரி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எந்தப் பங்களிப்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே லயோலா கல்லூரியின் பெயரில் அறிக்கைகள் ஏதேனும் வழங்கப்பட்டால், ஊடக நண்பர்கள் அதனை புறக்கணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் போக்குகளை வெளியிட சென்னை, லயோலா கல்லூரி என்ற பெயரை பயன்படுத்தும் தனிநபர்களையும் மன்றங்களையும் கடுமையாக எச்சரிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.