ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,951 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 30,535 பேரும், பஞ்சாபில் 2,669 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.தற்போதைய நிலையில், 3,34,646 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 212 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,59,967ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 23,44,45,774 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 8,80,655 மாதிரிகள் நேற்று மட்டும் பரிசோதனை செய்யப்பட்டன. இன்று காலை 7 மணி வரை நாடு முழுவதும் 4,50,65,998 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று மட்டும் 476 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு பாதிப்பு மொத்த எண்ணிகை 3 லட்சத்து 25ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை 2ஆயிரத்து 798 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தொற்று பரவல் தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அஜ்மீர், பில்வாரா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, உதய்பூர் உள்பட 8 நகரங்களில் இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இயங்கி வரும் சந்தைகளை இரவு 10 மணிக்கு மேல் மூடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிக்கூடங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது.
இதைத்தவிர ராஜஸ்தானுக்கு வரும் வெளிமாநிலத்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம் என்றும், நெகடிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதி என்றும் அறிவித்து உள்ளது.