திருச்சி: கரூரில் தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், ஆற்றில் மண் அள்ளுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், கரூர் திமுக வேட்பாளருமான எம்எல்ஏ செந்தில்பாலாஜி மீது, காவல்துறையினர் 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட செந்தில் பாலாஜி, தேர்தல் பணினையை திறந்து வைத்து பேசும்போது, ஸ்டாலின் முதல்வரானதும் அடுத்த நிமிஷமே ஆற்றில் மணல் எடுத்துக்கொள்ளலாம், ஸ்டாலின் 11மணிக்கு முதல்வராக பதவியேற்றதும் 11.05 மணிக்கு மணல் எடுக்கமாட்டு வண்டியை ஆற்றுக்கு ஓட்டிச்செல்லுங்கள். எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான். தடுத்தால் எனக்கு போன் பண்ணுங்க. அந்த அதிகாரி இங்க இருக்கமாட்டான்’ என பேசினார், இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆற்றில் மணல் அள்ள உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், செந்தில்பாலாஜியின் பேச்சு கடும் விமர்சனங்களை எழுப்பியது.
இதுகுறித்து, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாபுமுருகவேல் கரூர் நகர போலீஸில், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி மீது புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, வி.செந்தில்பாலாஜி மீது பிரிவு 153 – அரசுக்கு எதிராக கலகம் ஏற்படுத்தும் வகையில்பேசுதல், 189-அரசு ஊழியரை மிரட்டுதல், 505(1)பி- அரசையும், ஆட்சியாளர்களையும் மிரட்டுதல், 506(1)-மிரட்டுதல், 353-அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.