சென்னை: தமிழகத்தில் தபால் வாக்களிக்க சுமார் 21லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், இதுவரை 2.44 பேர் மட்டுமே தபால் வாக்களிக்க விண்ணப்பம் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், முதல்முறையாக  தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறைப்படி தபால் வாக்குகள் செலுத்த அனுமதி வழங்ககப்பட்டு உள்ளது. அதன்படி,  வாக்குச்சாவடி வர முடியாத முதியோர்கள், எளிதில் தொடர்பு கொள்ள முடியாத பகுதிகளில் பணியாற்றுபவர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள், ராணுவத்தினர், காவல்துறையினர், மாற்றுத்திறனாளிகள், உள்பட அத்தியாவசிய பணிகளில் உள்ளவர்கள், தேர்தலுக்கு முன்னதாகவே, தபால் வாக்குக்கான  வாக்குச்சீட்டினை பெற்று, அதில் தங்கள் ஓட்டினை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தபால் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமிருந்து படிவம் 12டி-ஐ பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய நடைமுறைபடி, தமிழகத்தில்  80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மட்டும் 12,91,32 பேர் உள்ளனர்.  மாற்றுத்திறனாளி  வாக்காளர்கள் 4.62 லட்சம் பேர் உள்ளனர். மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ராணுவ வீரர்கள், காவல் துறையினர் என சுமார் 4.5 லட்சம் பேர் தபால் வாக்குகள் செலுத்த தகுதியானவர்கள். அதாவது ஏறக்குறைய சுமார் 22 லட்சம் பேர் தபால் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில்,  இதுவரை தபால் வாக்குகள் செலுத்த 2.44 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்து இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். அதன்படி,  80வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் 1.59 பேரும், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் 2,770 பேர், தேர்தல் பணியாளர்கள் 33.189 பேர், மாற்றுத்திறனாளிகள் 49,114 பேர் என மொத்தம் 2.44 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

பொதுவாக, தமிழகத்தில் அதிகபட்சமாக 30ஆயிரம் வாக்குகள் வரை தபால் ஓட்டுக்கள் பதிவான நிலையில், இந்த முறை சுமார் இரண்டரை லட்சம் பேர் தபால் வாக்குகளை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீதமுள்ள சுமார் 20 லட்சம் வாக்காளர்கள், வாக்குச்சாவடி வந்து வாக்குகளை செலுத்துவார்களா அல்லது, வாக்களிப்பை தவிர்ப்பார்களா என்பது தெரியவில்லை.

12லட்சம் பேர்: தபால் வாக்குகளை கண்டு தமிழக எதிர்க்கட்சிகள் அஞ்சுவது ஏன்?