தகமண்டலம்

தகமண்டலம் தொகுதியில் பாஜக வேட்பாளர் தேர்வு குறித்து இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது.

வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.   அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாஜக ஆளும் கர்நாடக மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் ஒரு தொகுதியைக் கேட்டதால் உதகமண்டலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதுவரை உதகமண்டலம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை.

இதற்குக் காரணம் இங்கு தகுதியான வேட்பாளரை முடிவு செய்ய முடியாத நிலை உள்ளதாக சொல்லப்படுகிறது.  இதையொட்டி நேற்று ஹெலிகாப்டர் மூலம் பாஜக வின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி டி ரவி உதகமண்டலம் வந்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிடி ரவி, “நடைபெற உள்ள தேர்தலில் திமுக வேட்பாளருக்கு இணையாக நாம் செலவு செய்ய முடியுமா? இந்த வேட்பாளரும் விலை போய் விட்டால் என்ன செய்வது?” எனக் கேள்விகள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

செய்தியாளர்களிடம் பாஜக நிர்வாகிகள், “ஆலோசனைக் கூட்டத்தில் 11 நபர்களைக் கண்டறிந்து அதில் 3 நபர்களை இறுதி செய்துள்ளோம்.   மத்தியக் குழுவிடம் இந்த பட்டியல் அளிக்கப்பட்டு அவர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” எனத் தெரிவித்துள்ளனர்.  சி டி ரவியும் அதே தகவலைத் தெரிவித்துள்ளார்.