கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆச்சாரியா’ .
சிரஞ்சீவின் ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக இருந்தது. அவர் விலகவே, அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
சிரஞ்சீவியின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆச்சாரியா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிட்டது படக்குழு . மே 13-ம் தேதி திரையரங்குகளில் ‘ஆச்சாரியா’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
சில தினங்களுக்கு முன்பு ராஜமுந்திரியில் ஒரு மாதம் முக்கிய காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு. இதில் சிரஞ்சீவி – ராம்சரண் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனிடையே, படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை என்பதால் மே 13-ம் தேதி வெளியீடு சாத்தியமில்லை எனத் தகவல்கள் வெளியாகின.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘ஆச்சாரியா’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான மேட்னி எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “சிரஞ்சீவி – ராம்சரண் நடித்து வரும் ‘ஆச்சாரியா’ படத்துக்காக ராஜமுந்திரியில் ஒரு மாதக் காலம் முக்கிய காட்சிகளை படமாக்கினோம். இதோடு படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவுற்றது. உலகளவில் மே 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளது.
Team #Acharya completed a month long schedule in Rajahmundry and Illendu regions of AP and Telangana. Gearing up for a grand world wide release on 13th May, 2021.#AcharyaOnMay13 pic.twitter.com/gPloJTJvCb
— Matinee Entertainment (@MatineeEnt) March 10, 2021