சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை சென்னையில் நடைபெற்ற அமமுக கூட்டணி கட்சிகள் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது. அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

இந்த பொதுக்கூட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாவுதீன் ஒவைசி, எஸ்டிபிஐ தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அமமுக தேர்தல் அறிக்கை

ஆண்களுக்கும் இருசக்கர வாகனத் திட்டம் விரிவுபடுத்தப்படும்,

பேரூராட்சி/ஊராட்சி தோறும் அம்மா உணவகங்கள் நிறுவப்படும்,

தமிழர் பண்பாட்டு திருவிழாவாக ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படும், அதற்கு அரசு நிதியுதவி வழங்கும்.

மாதம்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும்.

6-ம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.

திருமண உதவித்தொகை 25 ஆயிரத்தில் இருந்து 50,000- ஆகவும், 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாகவும் உயர்த்தப்படும்.

மாதத்திற்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.

மது உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு எடுக்கப்படும்.

முதியோர் உதவித்தொகை ரூ.2,000-ஆக உயர்த்தப்படும்.

தமிழக வேலைவாய்ப்பில் 85% தமிழர்களுக்கே வேலை வழங்க சட்டம் கொண்டு வரப்படும்

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை

30 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்

மேலும், முக்கிய திட்டமாக கிராமபுற தொழிலை வளர்ப்பது, முதலீட்டாளர்களாக மாற்றி கிராம மக்களை நகரத்தை நோக்கி செல்லாமல் கிராமத்திலேயே வேலை வாய்ப்பை உருவாக்கும் அம்மா பொருளாதார புரட்சித் திட்டம் கொண்டு வரப்படும், அதன் வாயிலாக  “ அரசின் நேரடிப் பார்வையில் கிராமப்புறங்களிலும், பேரூர்களிலும் பல்வேறு வகையான தொழிலகங்களை உருவாக்கி, அதன் வழியாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். புரட்சிகரமான இந்தத் திட்டம் ‘அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்படும்.

அம்மா பொருளாதார புரட்சித்திட்டத்தைச் செயல்படுத்த மாநில அளவில் தனித் துறை உருவாக்கப்படும். அரசின் பிற துறைகளில் இருக்கிற மனித வளம், உட்கட்டமைப்பு, நிதி ஆதாரம் உள்ளிட்டவை தேவைப்படும் இடங்களில் முழுமையாகவோ, பகுதியளவிலோ இதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

மூன்றாண்டுகளில் லாபம் ஈட்டும் தொழில் அமைப்புகளாக இவை உருமாற்றப்படும்போது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவதுடன், இந்தியாவுக்கே முன்மாதிரி திட்டமாகவும் திகழும்.

விவசாயம், தொழில் இரண்டையும் உள்ளடக்கிய நவீன தற்சார்பு பொருளாதாரத்தின் அடிப்படையில் அந்தந்தப் பகுதியில் கிடைக்கிற மூலப்பொருட்களைக் கொண்டு ஒருங்கிணைந்த தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

அந்தந்த பகுதியில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். தேவைப்பட்டால், அருகிலுள்ள ஊர்களில் உள்ளவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும். இதில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம் அளிக்கப்படுவதுடன், அவர்கள் பணியாற்றும் தொழிலகத்தின் பங்குதாரராகவும் ஆக்கப்படுவார்கள்.

அந்தந்தப் பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்கள், அதற்கு பங்களிப்பவர்களுக்கு நியாயமான விலையில் வழங்கப்படும். இதன்மூலம் தரமான பொருளை, வெளிச்சந்தையைவிடக் குறைவான விலையில் அவர்களால் பெற முடியும். ஒவ்வொரு ஊரிலும் தனித்தனி தொழிலகங்களாக செயல்படும் அவற்றை எல்லாம் மாவட்டவாரியாக ஒருங்கிணைத்து, அங்கே தயாராகும் பொருட்களை மற்ற மாவட்டங்களில் விற்பனை செய்யும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

ஒட்டுமொத்தமாக மாநில அளவிலான தேவை நிறைவடைந்த பிறகு, வெளிமாநிலங்களுக்கு அனுப்பவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் வாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.