டெல்லி: கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மருந்து, மூன்றாம் கட்ட ஆய்வில், 81 சதவீத திறனுடன் செயல்படுவது தெரிய வந்துள்ளது.
ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து, கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியானது, 3ம் கட்ட ஆய்வில் இருந்தபோது, அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, நாடு முழுதும் கோவாக்சின் தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந் நிலையில், பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கிருஷ்ணா எல்லா கூறியதாவது:
இந்தியாவிலேயே மிக அதிகமாக, 25 ஆயிரத்து, 800 பேரிடம், கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. அதில், கோவாக்சின், 81 சதவீத திறனுடன் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம், 27 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட, 3 கட்ட ஆய்வு விபரங்களை இது தெரிந்தது.
அதில்,கோவாக்சின் தடுப்பு மருந்து மிக அதிக ஆற்றலை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், உருமாறிய கொரோனா வைரசை தடுக்க, குறிப்பிடத்தக்க எதிர்ப்பாற்றல் இந்த தடுப்பூசிக்கு உள்ளது என்று அவர் கூறினார்.