சென்னை: ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற தலைப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு செலவில் விளம்பரம் வெளியிடுவதை எதிர்த்து திமுக மற்றும் டிராபிக் ராமசாமி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆட்சி தக்க வைத்துக்கொள்ள அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற திமுகவும் போட்டிப்போட்டு விளம்பரங்கள் செய்து வருகின்றனர். தொலைக்காட்சி மட்டுமல்லாது, ரேடியோ, சமூக வலைதளங்கள் என அனைத்திலும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
எடப்பாடி அரசு அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில், பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடப்படுகிறது.
இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்கக் கோரி திமுக சார்பிலும், விளம்பரம் செய்யும் செலவுத்தொகையை அதிமுகவிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய நிதி, கடந்த 2 மாதங்களாக விளம்பரங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் ஆளுங்கட்சியை முன்னிலை படுத்தும் இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர் ராஜகோபால், இவ்விவகாரம் தொடர்பாக அதிமுகவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஆணையம் பரிசீலித்து வருகிறது என்றும் மனுவுக்கு விரிவாக பதிலளிக்க அவகாசம் வழங்கக் கோரினார்.
அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இநத விளம்பரத்துக்காக 1000 கோடி ரூபாய் செலவழிக்கப்படவில்லை என்றும், ஜிஎஸ்டியுடன் சேர்த்து, 64 கோடியே 72 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும், அரசின் சாதனைகளை விளக்கி வெளியிடப்படும் இவ்விளம்பரங்கள் கடந்த 18 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியிட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வரவில்லை என்பதால், அரசு விளம்பரம் வெளியிட தடை ஏதும். இதுதொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனவும் கோரினார்.
இதை ஏற்று வழக்கு விசாரணையை மார்ச் 2 ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வழக்குகள் தொடர்பாக பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர்.