பரமக்குடி: தமிழக காங்கிரசார், பொய் சொல்லி அனுப்பிய வைத்த சந்தா பேப்பரை வைத்து டெல்லியில் பட்டாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் என சிவகங்கை தொகுதி எம்.பி.யான கார்த்தி சிதம்பரம், மாநில தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது, சிவகங்கை தொகுதி வேட்பாளராக, கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். ப.சிதம்பரத்தன் நெருக்குதல் காரணமாகவே, கார்த்தி சிதம்பரத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாக, ராகுல்காந்தி காரிய கமிட்டி கூட்டத்திலேயே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை தொகுதி பரமக்குடியில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் எம்.பி. தனது கட்சியான காங்கிரஸ் கூறிய கருத்து சர்ச்சையானது.
நிர்வாகிகளிடன் ஆலோசனை கூட்டத்தில் பேசிய கார்த்திசிதம்பரம், தமிழக காங்கிரசில் 70 லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள் என பொய்யாக அறிக்கை கொடுத்து விட்டார்கள். இதை நம்பி 2016-ம் ஆண்டு நான் தேர்தலில் நின்றுவிட்டேன் ஆனால், தேர்தலில் நமது கட்சி உறுப்பினர்களே, எனக்கு ஓட்டுப்போடவில்லை. இது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் இது குறித்து ஆய்வு செய்தபோது, சராசரியாக ஒவ்வொரு பாராளுமன்றத்திற்கும் 30 ஆயிரம் வாக்குகள் தான் விழுந்துள்ளது தெரிய வந்துள்ளது. அப்படி இருக்கும்போது, நமக்கு எப்படி 70 லட்சம் உறுப்பினர்கள் இருக்க முடியும்.
நம் நிர்வாகிகள் பொய்யாக சந்தா தொகை செலுத்தி பழைய பேப்பர்களை டெல்லிக்கு அனுப்பி விட்டார்கள். அங்கு டெல்லியில் இந்த பேப்பரை வைத்து பட்டாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் இளைஞர் காங்கிரஸ் என ஒரு பொய்யான அறிக்கை வந்தது. அதில் 13 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக கூறப்பட்டது. என்றார்.
சென்னை பாராளுமன்றத்தில் மட்டும் ஒரு லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னோம். ஆனால் வாங்கின வாக்குகள் மட்டும் 30 ஆயிரம் தான் வந்தது.
அதனால், உண்மையான விவரங்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும், பொய் சொல்வதை காங்கிரசார் நிறுத்த வேண்டும் என கூறினார்.
கார்த்தி சிதம்பரத்தின் இந்த பேச்சானது, கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.