வாஷிங்டன்:
அமெரிக்காவில், புதிய குடியுரிமை மசோதாவை அதிபர் ஜோ பைடன் அறிமுகம் செய்தார்.
அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமை பெறாமல் தங்கியிருந்து பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, ‘எச் – 1பி’ விசா வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விசா வாயிலாக, அதிக அளவிலான இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், எச் – 1பி விசா பெறுவதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இந்நிலையில், டிரம்பின் கொள்கைகளுக்கு நேர் எதிரானவராக கருதப்படும், தற்போதைய அதிபர் ஜோ பைடன், அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் விதமாக, குடியுரிமை சட்ட மசோதாவை, நேற்று முன்தினம், அறிமுகம் செய்தார்.
இந்த, 2021ம் ஆண்டின் அமெரிக்க குடியுரிமை சட்ட மசோதா, அமெரிக்காவில், ஆவணங்கள் இன்றி பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், 1.1 கோடி பேருக்கு, குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது. மேலும், ‘கிரீன் கார்டு’ பெறுவதற்கு இருந்த வரம்பு நீக்கப்பட உள்ளது.இதைத்தவிர, எச் – 1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணைகளுக்கும், வேலை வாய்ப்பு அங்கீகாரம் வழங்கப்படும்.