சென்னை: பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு முயற்சியாக இந்திய அரசின் ஆணையின்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விநியோகிக்கின்றனர். வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வழக்கமாக வாகனத்தை தண்ணீரால் கழுவும்போதும், மழை பெய்யும்போதும் தண்ணீர் பெட்ரோல் சேமிப்பு கலன்களில் கசிந்திடாது கவனம் செலுத்த வேண்டும்.

பெட்ரோலில் உள்ள எத்தனாலை ஈர்க்க சிறிதளவு தண்ணீர் போதுமானது. இது வாகனத்தின் சேமிப்பு கலனில் உள்ள பெட்ரோலின் எத்தனாலை தண்ணீராக மாற்றி பெட்ரோல் டேங்கின் அடிப்பகுதிக்கு சென்று தங்கிவிடும். ஆதலால் உங்கள் வாகனத்தை இயக்க கடினமாக இருக்கும் அல்லது ஓட்டும்போது வாகனம் குலுங்கி செல்லக்கூடும்.

இது தொடர்பாக பெட்ரோல் விற்பனையாளராகிய நாங்கள் தீவிர தரக் கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து பெட்ரோலினை விநியோகம் செய்து வருகின்றோம். ஆதலால் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களின் சேமிப்பு கலன்களில் சேர்ந்த தண்ணீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளரே பொறுப்பு.

வாடிக்கையாளர்கள் சில்லறை விற்பனை நிலையத்திலிருக்கும் பெட்ரோல்-டீசல் தரத்தை சரிபார்த்து கொள்ளலாம். ஆனால் வாகனம் பெட்ரோல் விற்பனை நிலையத்தினை விட்டு வெளியேறிய பிறகு எங்களால் எந்த வித உத்தவாதமும் அளிக்க முடியாது என்பதனை தங்களது மேலான கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.