புதுச்சேரி: தமிழக சட்டமன்ற தேர்தலோடு புதுச்சேரி மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் 17ந்தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய வருகிறார். இதையொட்டி, மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அந்த இடத்தை முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார்.
புதுச்சேரியிலும் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநிலத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு குறித்து தீவிர ஆலேசாசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துபிரசாரம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 17ஆம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார்.
வரும் 17ஆம் தேதி 12 மணியளவில் புதுச்சேரிக்கு வரும் ராகுல், இதில் புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியில் அரசியல் கலப்பு அல்லாமல் மீனவ சமுதாய மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில் ஏ.எப்.டி மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றுகிறார்.
ராகுல் பேச உள்ள விழா மேடை கடலூர்- புதுச்சேரி சாலையில் உள்ள ஏஎப்டி மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த மேடையை முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், “மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து காலதாமதம் செய்து மக்கள் மத்தியில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார். நாளை (பிப்.16) ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெற கோரி முழு கடையடைப்பு அறிவித்து இருந்தோம், ஆனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்ததால் தற்காலிகம் முழு அடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.